மல்லூர் அருகே டிரைவர் வீட்டில் நகை திருடிய 3 பேர் கைது
மல்லூர் அருகே டிரைவர் வீட்டில் கதவை உடைத்து நகை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பனமரத்துப்பட்டி:
நகை திருட்டு
மல்லூர் அருகே தாசநாயக்கன்பட்டி எஸ்.கே.சிட்டி பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி (வயது53). இவர் சேலம் சீலநாயக்கன்பட்டியில் தனியார் கார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த மாதம் 1-ந் தேதி கேரளாவில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு குடும்பத்தினரை அனுப்பி வைத்து விட்டார். இவரும் வேலைக்கு சென்று விட்டார்.
மதியம் 2 மணி அளவில் சாப்படுவதற்காக வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.
3 பேர் கைது
நகை திருட்டு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மல்லூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி அருண்குமார் (19), அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெயிண்டிங் தொழிலாளி அஜித் குமார் (20), சங்ககிரி அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த டிரைவர் சாரதி (21) ஆகிய 3 பேரும் ராமசாமி வீட்டில் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.