சேலத்தில் ஜவுளி கடை ஊழியரை தாக்கிய வாலிபர் கைது
சேலத்தில் ஜவுளி கடை ஊழியரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தர்மிசந்த் (வயது 48). இவர் சேலம் அருணாசல ஆசாரி தெருவில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய வழியில், 3 பேர் கும்பல் அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதுடன், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தானே என்று கூறி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், 3 பேரில் ஒருவரை மடக்கி பிடித்து சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட அந்த நபர் அஸ்தம்பட்டி பிள்ளையார் நகரை சேர்ந்த உமர்பரூக் மகன் முகமது உகாஷா(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முகமது உகாஷாவை கைது செய்ததுடன், அவருடன் தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகிறார்கள்.