வங்கி கொள்ளை முயற்சி வழக்கில் மீன் கடைக்காரர் கைது-பரபரப்பு வாக்குமூலம்

வங்கி கொள்ளை முயற்சி வழக்கில் மீன் கடைக்காரர் கைது செய்யப்பட்டார். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2022-10-28 20:36 GMT

சேலம் கிச்சிப்பாளையம் அருகே எருமாபாளையம் பகுதியில் சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்று உள்ளது. கடந்த 24-ந் தேதி இந்த வங்கியின் பின்பக்க சுவரில் மர்மநபர் ஒருவர் துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து அதன் அடிப்படையில் மர்மநபரை தனிப்படையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் வங்கி கொள்ளை முயற்சி தொடர்பாக சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

இதுகுறித்து போலீசார் கூறும் போது, 'சில்லி மீன் வறுவல் கடைக்காரரான முருகேசன் அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே அவர் பலரிடம் ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார். அந்த கடனை அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் வங்கியில் கொள்ளையடித்து கடனை அடைக்க திட்டமிட்டார். அதன்படி சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வங்கியின் சுவரை இரும்பு ராடு மூலம் துளையிட்டார். ஆனால் துளையிடும் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்ததால், அவர் தப்பி ஓடி உள்ளார்' என்றார்கள். முருகேசன் மீது வேறு வழக்குகள் ஏதும் பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்