தீபாவளி செலவுக்காக மூதாட்டியிடம் தாலிச்சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது
தீபாவளி செலவுக்காக மூதாட்டியிடம் தாலிச்சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது
கடத்தூர்
கோபி அருகே உள்ள கூலை மூப்பனூரை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி சுப்பையாள் (வயது 70). கடந்த 10-ந் தேதி 100 நாள் வேலைக்கு சென்ற சுப்பையாள், வேைல முடிந்ததும் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டு இருந்தார். கூலைமூப்பனூர் பள்ளி அருகில் வந்தபோது அந்த வழியாக முககவசம் அணிந்தபடி ஸ்கூட்டரில் வந்த 2 பேர் கலிங்கியத்துக்கு எப்படி செல்ல வேண்டும் என்று சுப்பையாளிடம் கேட்பது போல் சுப்பையாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துவிட்டு 2 பேரும் ஸ்கூட்டரில் மின்னலாய் மறைந்துவிட்டார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை பறித்தவர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வேட்டைக்காரன் கோவில் என்னும் இடத்தில் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் ஸ்கூட்டரில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோபி சீதாலட்சுமிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் தினேஷ் (24), மற்றொருவர் கோபியில் உள்ள டிராக்டர் கம்பெனியில் வேலை பார்க்கும் பட்டதாரி மவுலீஸ்வரன் (23) ஆகியோர் என்பதும், தீபாவளி பண்டிகையை உற்சாகமாக செலவு செய்ய கையில் பணம் இல்லாததால் மூதாட்டியிடம் தாலிச்சங்கிலியை பறித்ததும்,' தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து தாலிச்சங்கிலியையும் மீட்டார்கள்.