சொத்துக்காக தாயை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த டிரைவர கைது

உடுமலை அருகே சொத்துக்காக தாயை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-15 18:51 GMT


உடுமலை அருகே சொத்துக்காக தாயை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

இது பற்றி போலீ்ஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெண் அடித்துக்கொலை

உடுமலையை அடுத்த சின்ன பாப்பனூத்தைச் சேர்ந்தவர் சபாபதி (வயது 65). இவரது மனைவி பூங்கொடி (55). இவர்களது மகன் சதீஷ்குமார் (வயது 35), டிரைவர்.

சதீஷ்குமாருக்கு மனைவி, மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தனது தந்தைக்கு சொந்தமான சொத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி காலை 11 மணியளவில் சொத்து சம்பந்தமாக தாயார் பூங்கொடியுடன் சதீஷ்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் பூங்கொடியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் மயக்கமடைந்த அவரை சதீஷ்குமார் தூக்கிச்சென்று தோட்டத்திற்கு அருகே உள்ள பி.ஏ.பி. பிரதான கால்வாயில் போட்டு விட்டு தலைமறைவாகி விட்டார். தற்போது கால்வாயில் 2-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் பூங்கொடி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

டிரைவர் கைது

இந்த சூழலில் தனது மனைவி காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்த சபாபதி தளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் அமராவதி அருகே உள்ள சாயப்பட்டறை பகுதியில் பதுங்கி இருந்த சதீஷ்குமாரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் தனது தாயாரை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் போலீசார் முன்னிலையில் அவர் எவ்வாறு தாயை கொலை செய்தார் என்பதையும் நடித்துக் காட்டினார். அதை தொடர்ந்து போலீசார் சதீஷ்குமார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பூங்கொடியின் உடலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

கணவர் கண்ணீர் பேட்டி

இது குறித்து சபாபதி கூறியதாவது:-

நான் எனது மனைவி பூங்கொடி மற்றும் மகனுடன் விவசாயம் பார்த்து வருகிறேன். மகன் சதீஸ்குமார் கடந்த 10 மாதங்களாகவே எனது சொத்தை அவர் பெயருக்கு எழுதி வைக்கக்்கோரி எங்களை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார். அவருடைய தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் நான் தோட்டத்தை விட்டு வெளியில் கூலி வேலைக்கு சென்று விட்டேன். அப்போது எனது மனைவியையும் உடன் வருமாறு அழைத்தேன். ஆனால் அவர் என்னுடன் வர மறுத்துவிட்டு தோட்டத்து சாலையிலேயே தங்கிக்கொண்டார். எனது மகனின் அராஜக செயல் குறித்து போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதை சாதகமாகக் கொண்ட அவர் கடந்த செப்டம்பர் மாதம் 6-ந் தேதி எனது மனைவியின் கையை அரிவாளால் வெட்டிவிட்டார். உள் நோயாளியாக இருந்த என் மனைவியிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார் பெயரளவுக்கு வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் நான் வேலை செய்து கொண்டிருந்த இடத்துக்கு வந்து கடந்த 2-ந் தேதி எனது காரை எனது மகன் எடுத்துச் சென்றார். இதுகுறித்து உடுமலை போலீசில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த 12-ந் தேதி என்னுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த எனது மனைவியை எனது மகன் தாக்கினார். அப்போது அய்யோ என்னை அடிக்காதே என்று எனது மனைவியின் அலறல் சத்தத்துடன் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. 10 மாதம் சுமந்து பெற்று வளர்த்த தாயை ஈவு இரக்கம் இல்லாமல் சொத்துக்காக எனது மகன் கொலை செய்து விட்டான். நான் அளித்த புகார்கள் அடிப்படையில் போலீசார் தக்க தருணத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் எனது மனைவி இன்று உயிருடன் இருந்திருப்பார். இப்பொழுது நான் யாருமில்லாத அனாதையாகி அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் நிற்கிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

சொத்துக்காக பெற்ற தாயை மகன் கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்