முன்னாள் ஊழியர் உள்பட 3 பேர் கைது

தனியார் நிறுவன ஊழியர்களை அரிவாளால் வெட்டி பணத்தை கொள்ளையடித்த முன்னாள் ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-09 18:45 GMT

காரைக்குடி, 

தனியார் நிறுவன ஊழியர்களை அரிவாளால் வெட்டி பணத்தை கொள்ளையடித்த முன்னாள் ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பணம் கொள்ளை

காரைக்குடி செக்காலை சாலையில் சிகரெட் மொத்த வியாபாரம் செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு காரைக்குடி காந்திபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 30), மாதவன் நகரை சேர்ந்த தமிழரசன் (27) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று விக்னேஷ் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சிகரெட் வினியோகம் செய்யவும், ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்ட கடைகளில் பணம் வசூல் செய்வதற்காகவும் வேனில் புறப்பட்டார். வேனை டிரைவர் தமிழரசன் ஓட்டினார். பல்வேறு இடங்களில் வசூலை முடித்துவிட்டு மாலை 4.40 மணியளவில் புதுவயலில் இருந்து காரைக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

கோட்டையூர் அருகே வரும்போது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வேனை வழிமறித்து பயங்கர ஆயுதங்களோடு டிரைவர் தமிழரசனை தாக்கியது. மேலும் விக்னேசை சரமாரியாக அரிவாளால் வெட்டி அவர் வைத்திருந்த ரூ.11 லட்சத்துடன் காரில் ஏறி தப்பியது.

3 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திடினர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த விக்னேஷ், தமிழரசன் இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதனடிப்படையில் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட காரை கண்டறிந்து கரூர் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த முனீஸ்வரன் (25), கிஷோர்குமார் (22), காரைக்குடி அன்வர்சலாம் (24) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர். இதில், அன்வர்சலாம் இந்த சிகரெட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்