2 கார்களில் கஞ்சா, குட்கா கடத்தல்-ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது

கொண்டலாம்பட்டி, இரும்பாலை பகுதியில் 2 கார்களில் கஞ்சா, குட்கா கடத்திய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-11 21:12 GMT

கொண்டலாம்பட்டி:

காரில் கஞ்சா கடத்தல்

கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள பட்டர்பிளை பாலம் இறக்கத்தில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் 2 கிலோ கஞ்சாவும், 250 கிலோ குட்காவும் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த காரில் வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டத்தை சேர்ந்த கிமாராம் (வயது 28), ராஜேஷ் குமார் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். கைதான அவர்கள் இருவரும், காரில் கஞ்சா, குட்காவை கடத்திக்கொண்டு நாமக்கல் செல்வதாக தெரிவித்தனர். மேலும் இந்த கடத்தலுக்கு பயன்படுத்திய கார், அதில் இருந்த கஞ்சா மற்றும் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது.

இரும்பாலையில் சோதனை

இதனிடையே சேலம் இரும்பாலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெசல் குமார் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அந்த காரில், 2½ கஞ்சா மற்றும் 3 மூட்டைகளில் 150 கிலோ புகையிலை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டத்தை சேர்ந்த ராஜாராம் மகன் சாலேராம் (38) என்பதும், இவர் பெங்களூருவில் இருந்து காரில் கஞ்சா மற்றும் புகையிலை வாங்கி வந்து சேலத்தில் விற்பனை செய்ய இருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததுடன் கார் மற்றும் கஞ்சா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் ஒருவரை இரும்பாலை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்