போலி மதுபான ஆலை நடத்திய 3 பேர் கைது
போலி மதுபான ஆலை நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை,
போலி மதுபான ஆலை நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலி மதுபாட்டில்கள்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் போலி மது விற்பனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இந்த போலி மது பாட்டில்கள் சிவகங்கை பகுதியிலிருந்து தயாரித்து அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியை அடுத்த சிவலிங்கபுரம் பகுதியில் போலி மதுபான ஆலை ஒன்று செயல்படுவதும், அங்கிருந்து தயாரிக்கப்பட்ட பீர் பாட்டில்தான் திருச்சி பகுதியில் விற்பனைக்கு வந்ததும் தெரியவந்தது.
3 பேர் கைது
இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் தலைமையில் திருவெறும்பூர் போலீசார் நேற்று சிவகங்கை வந்தனர். அவர்கள் சிவகங்கை மதுவிலக்கு போலீசார் உதவியுடன் மதகுப்பட்டியை அடுத்த சிவலிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் திடீர் சோதனை செய்தபோது அங்கு போலி மதுபான ஆலை செயல்பட்டு வந்ததும், அங்கு மதுபானம் தயாரிக்க தேவையான பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்த புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 46), புதுச்சேரி கரிக்காலம்பாக்கம் பெருங்கையூரை சேர்ந்த ராம்குமார் என்ற ரெட்டி (59), தோட்டத்தின் உரிமையாளர் சிவலிங்கபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
பறிமுதல்
போலீசாரின் விசாரணையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பாக ராஜேந்திரனுக்கு மாரிமுத்து அறிமுகமானதாகவும் அதை தொடர்ந்து ராஜேந்திரன் தனது தோப்பில் மதுபானம் தயாரிக்க தேவையான எந்திரங்கள், பாட்டில்களை வாங்கி வைத்திருந்ததும், இதை பயன்படுத்தி பீர் தயாரித்து திருச்சி மாவட்டத்தில் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலி மதுபான ஆலையில் இருந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சிவகங்கை மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.