மதுரை ரெயில் நிலையத்தில் எம்.பி. தலைமையில் நுழைந்த 458 பேர் கைது
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ரெயில் நிலையத்திற்குள் தடையை மீறி நுழைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 458 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் போலீசார் சிலர் காயம் அடைந்தனர்.
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ரெயில் நிலையத்திற்குள் தடையை மீறி நுழைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 458 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் போலீசார் சிலர் காயம் அடைந்தனர்.
ரெயில் மறியல்
இந்திய ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்க்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது தவிர மதுரை - வாரணாசி இடையே தனியார் ெரயில் இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
அதன்படி அக்கட்சியினர் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை பகுதியில் நேற்று காலை கூடினர். பின்னர் அவர்கள் அந்த கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். எம்.பி. தலைமையில் ஊர்வலமாக ரெயில் மறியல் போராட்டத்திற்கு சென்றனர். இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ரெயில் நிலையம், அதன் நுழைவு வாயில்கள் மற்றும் அந்த பகுதி சாலைகளில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
போலீசார் காயம்
தடுப்புகள் அமைத்து யாரும் உள்ளே நுழையாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிலையில் ஊர்வலமாக வந்த கம்னியூஸ்டு கட்சியினர் ரெயில் நிலையம் முன்பு கோஷம் எழுப்பினார்கள். அப்போது அவர்களை போலீசார் ரெயில் நிலையத்திற்குள் செல்லாதவாறு தடுத்து நிறுத்தினார்கள்.
இதனால் போராட்டக்காரர்களும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் தடுப்புகளையும் மீறி உள்ளே நுழைந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை ஏட்டு மணிராஜ், ஒருவரை தடுத்து நிறுத்தினார்.
உடனே அவர் தன்னை எப்படி தடுத்தாய் என்று கூறி அவரது கன்னத்தில் அறைந்தார். அதுதவிர போராட்டக்காரர்களை பிடிக்க முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் என சில போலீசார் தடுமாறி விழுந்து காயம் அடைந்தனர்.
458 பேர் கைது
போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் ரெயில்நிலையத்தில் இருந்து வெளியே வந்து கோஷம் எழுப்பினார்கள்.
இதனால் பயணிகள், ரெயில் நிலையத்திற்குள் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வெங்கடேசன் எம்.பி. உள்ளிட்ட 458 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 60 பேர் பெண்கள். அனைவரும் நேற்று இரவு வரை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் பெரியார் பஸ் நிலைய பகுதியில் இருந்து சிம்மக்கல் செல்லும் வழிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.