கடம்பூர் அருகே பெண் மர்ம சாவில் திடீர் திருப்பம்: கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர் கைது- நடத்தை சந்தேகத்தால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்
கடம்பூர் அருகே பெண் மர்ம சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்து கொன்றதாக கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
டி.என்.பாளையம்
கடம்பூர் அருகே பெண் மர்ம சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்து கொன்றதாக கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெண் சாவு
டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூர் அருகே உள்ள அத்தியூர் கேர்மாளம் பகுதியை சேர்ந்தவர் தனராஜ் (வயது40). விவசாயி. அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகள் துளசிமணி (31). இவருக்கும், தனராஜுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி இரவு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பொன்னுசாமியிடம் அவரது மகள் துளசிமணி வீட்டில் இறந்து கிடப்பதாக கூறினார்கள். இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்தார்.
போலீசில் தந்தை புகார்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கடம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, துளசிமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து பொன்னுசாமி கடம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தபுகாரில் அவர், 'என்னுடைய மகள் துளசிமணி முகத்தில் காயங்கள் உள்ளன. எனவே அவளது சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.
கொலை
அதன்பேரில் கடம்பூர் போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், பங்களாப்புதுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் போலீசாருக்கு தனராஜ் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தனராஜ் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்ெகாண்டார்.
பரபரப்பு வாக்குமூலம்
போலீசில் அவர் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனது மனைவியின் நடத்தை மீது நான் சந்தேகப்பட்டு வந்தேன். இதனால் எனது மனைவிக்கும், எனக்கும் பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்றும் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு திட்டினேன். இதனால் எங்கள் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரது கழுத்தை பிடித்து நெரித்தேன். இதனால் என்னிடம் இருந்து தப்பிக்க போராடினார். இதில் அவரது முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. இதில் மூச்சுதிணறிய நிலையில் மயங்கி விழுந்தார். சிறிதுநேரத்தில் துளசிமணி இறந்துவிட்டார்.
இவ்வாறு தனராஜ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
கைது
இதைத்தொடர்ந்து போலீசார் மர்ம சாவை கொலை வழக்காக பதிவு செய்து தனராஜை கைது செய்தனர். பின்னர் அவர் கோபியில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டார்.