கிருஷ்ணகிரி அருகே துரித உணவகத்தில்`சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி-பேதிஉரிமையாளர் கைது

கிருஷ்ணகிரி அருகே துரித உணவகத்தில் `சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி-பேதி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-21 19:30 GMT

குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி அருகே `சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட வடமாநில தொழிலாளர்கள் 26 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டதோடு, உணவகம் பூட்டி `சீல்' வைக்கப்பட்டது.

வாந்தி-பேதி

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் பிரபல தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நடைபெற்று வரும் கட்டுமான பணியில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் கிருஷ்ணகிரி கே.தியேட்டர் சாலையில் உள்ள சக்தி என்ற பெயரில் இயங்கி வரும் துரித உணவகத்தில் `சிக்கன் ரைஸ்' வாங்கி சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக 26 பேருக்கு வாந்தி-பேதி ஏற்பட்டது.

உரிமையாளர் கைது

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட 26 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளரான கிருஷ்ணகிரி சமத்துவபுரத்தை சேர்ந்த சென்னப்பன் (வயது 42) என்பவரை கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துரித உணவகத்துக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த உணவு பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக சேலத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உணவகத்துக்கு `சீல்'

இதையடுத்து கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், ஆணையாளர் வசந்தி மற்றும் அலுவலர்கள் சென்று துரித உணவகத்தை பூட்டி `சீல்' வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் தியேட்டர்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்