கந்தம்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தில் உள்ள நூல் மில்லில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மாதேபள்ளியை சேர்ந்த திம்மப்பன் மகன் மாதேஷ் (வயது 28) என்பவர் வேலை செய்து வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ராமாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்தார். மாணவி தேர்வில் தேர்ச்சி பெறாததால் பெற்றோர் தெரிந்த நபர்கள் மூலம் கந்தம்பாளையத்தில் மாதேஷ் வேலை செய்து வரும் நூல் மில்லில் தங்களது மகளை வேலைக்கு சேர்த்தனர்.
இந்த நிலையில் மாதேஷ் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நூல் மில்லில் இருந்து கடத்தி சென்றார். இதுகுறித்து சிறுமியின் தாய் மகளை காணவில்லை என நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று கந்தம்பாளையம் பகுதியில் இருந்த மாதேசை தனிப்படை போலீசார் பிடித்து நல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் மாதேசை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சிறுமி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.