தர்மபுரியில் இருந்து பெங்களூருவுக்குகாரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யபட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரியில் இருந்து பெங்களூருவுக்கு காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி மற்றும் குட்கா, கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தர்மபுரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் புலிகரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 11 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கார் டிரைவர் மற்றும் உடன் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் பாலக்கோட்டை சேர்ந்த முஸம்மில் (வயது 29), இம்ரான் (30) என்பது தெரியவந்தது.
2 பேர் கைது
இவர்கள் தர்மபுரியில் இருந்து பெங்களூருவுக்கு காரில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் உள்பட 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 11 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தர்மபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.
மேலும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.