ஆத்தூர் அருகே விவசாயியை காரில் கடத்திய 3 பேர் கைதுதந்தை வாங்கிய பணத்துக்கு மகனை கடத்தியதாக வாக்குமூலம்
ஆத்தூர்
ஆத்தூர் அருகே விவசாயியை காரில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தந்தை வாங்கிய பணத்துக்காக மகனை கடத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
விவசாயி கடத்தல்
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள குள்ளம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மணி (வயது 36). விவசாயி. இவரது சித்தப்பா பன்னீர்செல்வம் மகன் வெற்றிவேல்(29). இவர்கள் 2 பேரும் காரில் ஆத்தூர் அருகே உள்ள வடசென்னிமலை கிராமத்திற்கு சென்றனர். அப்போது வடசென்னிமலை மஞ்சினி பிரிவு ரோடு அருகே புதுச்சேரி பதிவு எண் கொண்ட காரில் வந்த 5 பேர் மணி சென்ற காரை திடீரென வழிமறித்தனர்.
பின்னர் காரில் இருந்த மணியை அந்த நபர்கள் தாங்கள் வந்த காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து வெற்றிவேல் ஆத்தூர் ரூரல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அந்த நபர்கள் மணியை எதற்காக காரில் கடத்தி சென்றார்கள் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
அப்போது கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா திட்டக்குடி அருகே உள்ள பாசார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (35) என்பவரிடம் மணியின் தந்தை முருகேசன் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறி 15 மாதங்களுக்கு முன்பு ரூ.8 லட்சம் பெற்றுள்ளார். அதை பலமுறை வெங்கடேஷ் திருப்பி கேட்டும் முருகேசன் பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் அதே ஊரை சேர்ந்த மதிவாணன் (30), செல்வம் (23), ரமேஷ் (37), பிரகாஷ் (27) கோவிந்தன் (37) ஆகியோருடன் சேர்ந்து மணியை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பாசார் கிராமத்திற்கு சென்று மணியை மீட்டனர். மேலும் அங்கிருந்த வெங்கடேஷ், மதிவாணன், செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முருகேசன் வாங்கிய பணத்திற்காக மணியை காரில் கடத்தியது தெரியவந்தது. இந்த கடத்தலில் தொடர்புடைய ரமேஷ், பிரகாஷ், கோவிந்தன் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.