கர்நாடகாவுக்கு லாரி, வேனில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் உள்பட 3 பேர் கைது

தர்மபுரியில் இருந்து கர்நாடகாவுக்கு லாரி, வேனில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-08-29 19:30 GMT

தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 180 மூட்டைகளில் 9 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இந்த லாரியை தொடர்ந்து வந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 1 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரி, வேன் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

3 பேர் கைது

தொடர்ந்து லாரி மற்றும் வேனில் வந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் தண்டுகாரனஅள்ளியை சேர்ந்த டிரைவர் சம்பத் (வயது 28), சொன்னம்பட்டியை சேர்ந்த மற்றொரு டிரைவர் கோகுல் (20), கிளீனர் அசோக்குமார் (21) என்பதும், தர்மபுரியில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் ரேஷன் அரிசியை தர்மபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் போலீசார் ஒப்படைத்தனர். இந்த ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக காரிமங்கலத்தை சேர்ந்த முருகானந்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தனூரைச் சேர்ந்த கைலாசம் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்