ரூ.1 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தருவதாக கூறிநிதி நிறுவன ஏஜெண்டிடம் ரூ.80 லட்சம் மோசடிகேரளாவை சேர்ந்த 3 பேர் கைது

Update: 2023-08-26 19:00 GMT

ரூ.1 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தருவதாக கூறி நிதி நிறுவன ஏஜெண்டிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக கேரளாவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆசைவார்த்தை

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே உள்ள ஆயனிவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 39). தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இவருக்கும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த விபின் என்பவருக்கும் நிதி நிறுவனம் மூலம் கடன் வாங்கி கொடுக்கும்போது பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீ குமார் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருந்தால் அதை கமிஷன் அடிப்படையில் மாற்றி தருகிறேன் என்று கூறினார்.

இதையடுத்து திருவனந்தபுரத்தை சேர்ந்த சிலரிடம் ரூ.1 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்கி தருவதாகவும், இதற்கு ரூ.80 லட்சத்திற்கு 500 ரூபாய் நோட்டுகளை தர வேண்டும் என்றும் விபின் கூறியுள்ளார். இந்த ஆசைவார்த்தையை நம்பிய ஸ்ரீகுமார் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் பெற்று ரூ.80 லட்சத்திற்கு 500 ரூபாய் நோட்டுகளை திரட்டினார். பின்னர் ஸ்ரீகுமாரிடம் பணத்துடன் தர்மபுரிக்கு வருமாறு விபின் கூறினார்.

தப்பி சென்றனர்

இதையடுத்து நண்பர்கள் 2 பேருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீகுமார் தர்மபுரிக்கு வந்து குண்டல்பட்டியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். பின்னர் ரூபாய் நோட்டுகளை மாற்ற குண்டல்பட்டி அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றனர். அங்கு ஸ்ரீகுமார் தான் கொண்டு வந்த ரூ.80 லட்சம் கொண்ட 500 ரூபாய் நோட்டுகளை விபின் அனுப்பிய நபர்களிடம் கொடுத்தார். அதை வாங்கி கொண்ட அவர்கள் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர்.

பின்னர் சிறிது நேரத்தில் அங்கு வந்த சிலர் ரூ.2000 நோட்டுகள் கொண்ட ரூ.1 கோடியை ஸ்ரீகுமாரிடம் கொடுப்பதற்காக காண்பித்தனர். அப்போது அப்பகுதிக்கு ஒரு போலீஸ் வாகனம் வந்தது. இதனால் அந்த பணத்தை கொடுக்காமல் அவர்கள் காரில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

திட்டமிட்டு மோசடி

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகுமார் மற்றும் அவருடைய நண்பர்கள் அங்கிருந்து சென்றனர். பின்னர் ஸ்ரீகுமார், விபின் அனுப்பிய நபர்களை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து விபினிடம் கேட்டபோது அவர் முறையாக பதில் சொல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் பண பரிமாற்றம் நடக்க இருந்த இடத்தில் போலீஸ் வாகனத்தில் வந்தவர்கள் உண்மையான போலீசார் இல்லை என்பதும் தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டு இருப்பதும் ஸ்ரீகுமாருக்கு தெரியவந்தது.

3 பேர் கைது

இந்த மோசடி தொடர்பாக ஸ்ரீகுமார் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் சம்பவம் நடந்த பகுதி அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் பார்வையிட்டனர்.

இதனை தொடர்ந்து மோசடியில் தொடர்புடைய கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த சஜிர்கான் (34), ஜாகீர் அலி (33), கோழிக்கோடு பகுதியை சேர்ந்த அஷ்ரப் (51) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய மேலும் 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்