பர்கூர் அருகேபள்ளி வேன் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

Update: 2023-07-20 19:30 GMT

பர்கூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் எலத்தகிரி அருகே உள்ள சகாயபுரத்தை சேர்ந்தவர் சர்லின் ஆரோக்கியம் (வயது 25). தனியார் பள்ளி வேன் டிரைவர். இவர் கடந்த 18-ந் தேதி பள்ளி மாணவிகளை ஏற்றி கொண்டு திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள சின்ன கந்திலியை சேர்ந்த மதன் (21) என்பவர், பள்ளி மாணவிகளை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை கவனித்த சர்லின் ஆரோக்கியம் அவரை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சர்லின் ஆரோக்கியம் மாணவ, மாணவிகளை இறக்கி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது திருப்பத்தூர்- பர்கூர் சாலையில் சிகரலப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மதன், அவருடைய நண்பர்கள் தினேஷ் (25), சிகரலப்பள்ளி தம்மகவுண்டனூர் அருகே உள்ள மசூதி வட்டத்தை சேர்ந்த ரவி (23) ஆகிய 3 பேர் வேனை வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள் வேன் டிரைவர் சர்லின் ஆரோக்கியத்தை தாக்கியதோடு, வேன் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இதுதொடர்பாக டிரைவர் சர்லின் ஆரோக்கியம் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன், ரவி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது தாக்குதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவான தினேசை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்