ஈமு கோழி மோசடி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை:போலீசாரின் பிடியில் இருந்து தப்பியவர் ஐதராபாத்தில் கைது
ஈமு கோழி மோசடி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய கைதி ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.
8 பேர் கைது
நாமக்கல்லில் எஸ்.ஆர்.ஒய். என்ற பெயரில் ஈமு கோழிப்பண்ணை வைத்து, சிலர் பொதுமக்களிடம் இருந்து முதலீடு பெற்று மோசடி செய்தனர். இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக கோவை `டேன்பிட்' நீதிமன்றத்தில் 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்த விசாரணை முடிவில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.68.80 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் தலைமறைவாக இருந்த இனாக் (வயது 41) என்பருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிடப்பட்டது.
தப்பி ஓட்டம்
இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் லாட்ஜில் பதுங்கி இருந்த இனாக்கை அன்னதானப்பட்டி போலீசார் கடந்த மாதம் 30-ந் தேதி கைது செய்தனர். இதையடுத்து அவரை கோவை டேன்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றபோது கோவையில் போலீசாரின் பிடியில் இருந்து கைதி இனாக் தப்பி சென்றார். இதுகுறித்து கோவை பந்தயசாலை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கோவை, கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சின், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடினர்.
கைது
இதற்கிடையில் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நாரப்பள்ளியில் உள்ள தனியார் லாட்ஜில் இனாக் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது.அங்கு விரைந்து சென்ற தனிப்படையினர் நேற்று முன்தினம் இனாக்கை கைது செய்தனர். அவர் நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.