விவசாயிகளுக்கு தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்க ஏற்பாடு

விவசாயிகள் ரூ.2½ லட்சம் டெபாசிட் தொகை செலுத்தினால் தட்கல் முறையில் உடனே மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் தெரிவித்தார்.

Update: 2022-06-22 19:06 GMT

சிவகாசி, 

விவசாயிகள் ரூ.2½ லட்சம் டெபாசிட் தொகை செலுத்தினால் தட்கல் முறையில் உடனே மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் தெரிவித்தார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிவகாசி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமை தாங்கினார். தாசில்தார் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார்.

இதில் சிவகாசி தாசில்தார் லோகநாதன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 18 அதிகாரிகளும், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளை சேர்ந்த 32 விவசாயிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் பேசியதாவது,

தட்கல்முறை

விவசாயிகளுக்கு மின்சார வாரியத்தின் மூலம் அரசு அறிவிக்கும் இலவச மின் இணைப்பு உடனடியாக தாமதமின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும்.

தட்கல் முறையில் விவசாயத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள ரூ.2½ லட்சம் டெபாசிட் தொகை செலுத்தினால் உடனடியாக மின்சார இணைப்பு தாமதமின்றி வழங்கப்படும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய கருத்தரித்தல் திட்டத்தின் கீழ் ஜூலை வரை கால்நடைகளுக்கு இலவச சினை ஊசிகள் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறியதாவது:-

சித்துராஜபுரம் பகுதியில் உள்ள கண்மாய்களில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும். கிராவல் மண் அடிக்க உரிய அனுமதி வழங்க வேண்டும்.

ஆக்கிரமிப்பு

போலி பத்திரங்கள் மூலம் விவசாய விளை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரைப்பட்டி பகுதியில் அர்ச்சுனா ஆறு வரும் பாதையில் முட்புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதை அகற்ற வேண்டும். பாரத பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பெறாத நபர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி மேற்படி உதவித்தொகை வழங்கப்பெறாத நபர்களின் குறைகளை நிர்வத்தி செய்ய வேண்டும்.

யூரியா தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காக்கிவாடன்பட்டி-புளியங்குளம் கண்மாயை தூர்வார வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்