வனவிலங்குகளின் தாகம் தணிக்க ஏற்பாடு:கோடை வந்தாச்சு...கூடுதல் தண்ணீர் தொட்டிகள் தயார்...

கோடை வந்தாச்சு...நீர்நிலைகள் வற்றி வருகின்றன. இதனால் வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. அதனால் வனவிலங்குகள் தாகம் தணிக்க தவிக்கும் நிலை உள்ளது.

Update: 2023-02-26 18:45 GMT

கோவை

கோடை வந்தாச்சு...நீர்நிலைகள் வற்றி வருகின்றன. இதனால் வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. அதனால் வனவிலங்குகள் தாகம் தணிக்க தவிக்கும் நிலை உள்ளது.

வனவிலங்குகள்

கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு காட்டு யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இதில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. வனப்பகுதி வழியாக இடம் பெயர்ந்து செல்லும் யானைகள், மலையோர கிராமங்களுக்குள் புகுந்து அடிக்கடி அட்டகாசமும் செய்து வருகிறது. இதைத்தடுக்க மலையடிவாரத்தில் அகழி வெட்டப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் அகழியில் ஆழம் குறைந்த பகுதி வழியாக காட்டு யானைகள் வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுகின்றன.

குடிநீர் தட்டுப்பாடு

தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் காட்டெருமை, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதைத்தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக, வனப்பகுதியில் இருக்கும் தண்ணீர் தொட்டிகளை நன்றாக கழுவி தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் எந்த பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி வெளியே வருகிறதோ அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வாரம் ஒருமுறை தண்ணீர்

கோவை கோட்ட வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் வனப்பகுதியில் இருக்கும் சிறிய தடுப்பணைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதிக்குள் அலைந்து வருகிறது. ஏற்கனவே கோவை வனக்கோட்டத்தில் வனவிலங்குகளுக்கு தாகம் தணிக்க 68 தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன.

இந்த தொட்டிகளை வாரம் ஒருமுறை கண்காணித்து, நன்றாக கழுவி அதில் தண்ணீர் நிரப்ப உத்தரவிட்டு உள்ளது. இதற்காக நியமிக்கப்பட்டு உள்ள வனத்துறை ஊழியர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் யானை பாதுகாப்பு படையினர் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக தண்ணீர் தொட்டியை தேடி வரும் வனவிலங்குகள் தண்ணீரை குடித்து தாகம் தீர்த்து வருகிறது.

கூடுதலாக 6 தொட்டிகள்

அத்துடன் கோடை வறட்சியை சமாளிக்க, வனவிலங்குகள் தடையில்லாமல் தாகம் தணிக்க, கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன் பாளையம், சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் தலா ஒரு தொட்டி என்று கூடுதலாக 6 தண்ணீர் தொட்டிகள் ரூ.76 லட்சத்தில் கட்டப்பட்டு தயாராகி வருகின்றன. இதற்காக ஆழ்துளை கிணறு அமைத்து சோலார் மூலம் இந்த தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்