தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், இனாம் நில விவசாயிகள் இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
சிறு இனாம் ஒழிப்பு சட்டம் 1963-ன்படி செட்டில்மென்ட் தாசில்தாரிடம் பட்டா பெற்ற நிலங்களை பூஜ்ஜியம் மதிப்பு செய்யும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் பெயரில் உள்ள பட்டாக்களை அறநிலையத்துறை பெயரில் மாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். வக்பு வாரியம், இந்து அறநிலையத்துறையால் பாதிக்கப்பட்ட இனாம் நில விவசாயிகள், நில உரிமையாளர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, தலைவர் சண்முகசுந்தரம், இனாம் நில விவசாயிகள் இயக்க மாநில ஆலோசகர் பாலசுப்பிரமணியம், முருகேசன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.