விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-12-27 15:43 GMT


100 நாள் வேலையை தொடர்ந்த வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

ஜல்லிபட்டி ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் உடுமலை செயலாளர் ரங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பஞ்சலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றியச் செயலாளர் கனகராஜ், மாசாணி, ரமேஷ், பாலகிருஷ்ணன் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஜல்லிப்பட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு மாதத்தில் ஒரு வாரம் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. மீதி 3 வாரங்கள் ஊராட்சி நிர்வாகத்தால் வேலை மறுக்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதற்கு தயாராக இருந்தும் போதுமான அளவில் புதிய வேலைகளை செய்யாமல் காலம் தாழ்த்தி வருவது சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளது.

வேலை வழங்க வேண்டும்

இதனால் தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தி, அவர்களின் வாழ்வாதாரம் காக்க தொடர்ந்து 100 நாட்கள் வேலை வழங்கப்படுவதை ஊராட்சி நிர்வாகமும் ஒன்றிய நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.

என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்