திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவன தலைவர் கார்மேகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சென்னை ஆலந்தூரை சேர்ந்த சத்யா என்ற பெண்ணை ரெயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தவருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சென்னை அரசு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் மெத்தனப்போக்கால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா குறித்தும், இனிவரும் காலகட்டத்தில் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் தமிழக அரசு மிக துல்லியமாக கண்காணிக்க வேண்டும் எனவும், மற்றும் அரசு அதிகாரிகள் மெத்தனப்போக்கால் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் செல்வராஜ், ராஜா, மகளிர் அணி பொறுப்பாளர் யோகேஸ்வரி தஸ்லீம், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அங்குராஜ், பிரவு, மனோஜ் குமார், கலையரசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.