காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்கக்கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் அபிராமி தலைமை தாங்கினார். செயலாளர் பூங்கோதை, பொருளாளர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர். தமிழ் நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வு பெற்ற சங்க செயலாளர் கருணாநிதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை பொருளாளர் சிவக்குமார், நெடுஞ்சாலைத்துறை பொன்னரசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.ஆர்ப்பாட்டத்தின் போது கூறியதாவது:- முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் ரூ.33.56 கோடி செலவில் 1545 தொடக்கப் பள்ளிகளில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ-மாணவியருக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் அம்மா உணவகங்கள் மூலமும், உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் காலை உணவை வெளியில் சமைத்து மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது 43 ஆயிரம் பள்ளி மையங்களில் சத்துணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அதே பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்கள் மூலம் காலை உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினர்.