திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் யாழ்.ஆறுச்சாமி தலைமை தாங்கினார். தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்க தடை விதிக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசும் போது, 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகபட்சம் 100 மருத்துவ மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது என தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் குமரவேல், மாவட்ட காப்பாளர் ராமசாமி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பாளர் இல.அங்ககுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் பகுதி கழக செயலாளர் சுதன்ராசு நன்றி கூறினார்.