புதுடெல்லிக்கு மோட்டார் சைக்கிளில் ராணுவ வீரர்கள் பேரணி
75-வது காலாட்படை தினத்தையொட்டி, குன்னூர் எம்.ஆர்.சி.யில் இருந்து புதுடெல்லிக்கு மோட்டார் சைக்கிளில் ராணுவ வீரர்கள் பேரணியாக புறப்பட்டனர். 3,100 கி.மீட்டர் பயணம் செல்கின்றனர்.
குன்னூர்,
75-வது காலாட்படை தினத்தையொட்டி, குன்னூர் எம்.ஆர்.சி.யில் இருந்து புதுடெல்லிக்கு மோட்டார் சைக்கிளில் ராணுவ வீரர்கள் பேரணியாக புறப்பட்டனர். 3,100 கி.மீட்டர் பயணம் செல்கின்றனர்.
மோட்டார் சைக்கிள் பேரணி
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீர் பகுதியை ஆக்கிரமித்தனர். 1947-ம் ஆண்டு அக்டோபர் 16-ந் தேதி சீக்கிய படைப்பிரிவின் 1-வது பட்டாலியன் தலைமையிலான ராணுவத்தின் காலாட்படை ஸ்ரீநகரில் போரில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் கைப்பற்றப்பட்டது.
இதையொட்டி ஆண்டுதோறும் அக்டோபர் 16-ந் தேதி ராணுவத்தினர் காலாட்படை தினமாக கொண்டாடுகின்றனர். 75-வது காலாட்படை தினத்தையொட்டி, காலாட்படையின் உணர்வை ஊக்குவிக்கவும், உள்ளூர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், காலாட்படை இயக்குனரகத்தால் ஒரே நேரத்தில் 4 பிராந்தியங்களில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி தெற்கு பிராந்திய மோட்டார் சைக்கிள் பேரணி குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டரில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று தொடங்கியது.
ராணுவம் பற்றி விழிப்புணர்வு
பேரணியை எம்.ஆர்.சி. கமாண்டன்ட் பிரிகேடியர் எஸ்.கே. யாதவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியின் போது ராணுவ வீரர்கள், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி, காலாட்படையின் போரின் ராணி என்ற உணர்வை ஊக்குவித்தல் மற்றும் ஒட்டுமொத்த உள்ளூர் மக்களிடையே இந்திய ராணுவம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் பயணம் செய்கின்றனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறும்போது, 4 பிராந்திய மோட்டார் சைக்கிள் பேரணியும் வருகிற 27-ந் தேதியன்று புதுடெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் ஒன்று சேருகிறது. அதன் பின்னர் கொடியேற்றப்படும். மேஜர் ஜேம்ஸ் ஜோசப் தலைமையிலான மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டரின் குழு மற்ற 9 அணிகளுடன் சேர்ந்து, 9 நாட்களில் 3 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செல்கின்றனர். இந்த குழு ஷிவமொக்கா, பெல்காம், புனே, நாசிக், மோவ், சித்தோர்கர் மற்றும் ஜெய்ப்பூர் வழியாக புதுடெல்லியை சென்றடைகிறது என்றனர்.