ராணுவத்தில் பயிற்சி பெறும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முப்படைகளில், ராணுவ பணியில் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் தகுதி வாய்ந்த முன்னாள் படைவீரர்களின் மகன், மகள்கள் தொகுப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தொகுப்பு மானியம்
தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு, முப்படைகளில் ராணுவ பணியில் சேரும், முன்னாள் படைவீரர்களின் மகன், மகள்களை ஊக்குவிக்கவும், ராணுவ பணி பயிற்சி காலத்தின் போது ஏற்படும் செலவினங்களை எதிர்கொள்ளவும் தொகுப்பு மானியம் வழங்கப்படுகிறது.
அதன்படி நிரந்தர படைத்துறை அலுவலர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு ரூ.1 லட்சமும், முப்படையில் குறுகிய கால படைத்துறை அலுவலர் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், ராணுவத்தில் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர பதவிகளின் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்று வருபவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், தொகுப்பு நிதியில் இருந்து மானியமாக வழங்கப்படுகிறது.
விண்ணப்பம்
எனவே, முப்படைகளில் ராணுவ பணியில் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் தகுதி வாய்ந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பித்து மானியம் பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகி தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.