திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி
சோமசுந்தரம் கிராமத்தில்திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது.
சோளிங்கர்
சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்ச்சியாக அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியையொட்டி திரவுபதியம்மனுக்கு அபிஷேகம், மலர் அலங்காரம், சிறப்புப்பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. கட்டைக்கூத்து கலைஞர்கள் மகாபாரதத்தை நினைவு கூறும் வகையில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சியை தத்ரூபமாக நடித்துக் காட்டினர். திரளான பக்தர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அதில் குழந்தை இல்லாத தம்பதியர் பங்கேற்று குழந்தை வரம் வேண்டி சிறப்புப்பூஜைகள் செய்தனர்.
அர்ஜுனன் தபசு நிகழ்ச்சியில் சிறப்புப்பூஜைகள் செய்து சக்தி ஏற்றப்பட்ட எலுமிச்சை பழம் மற்றும் குங்குமம், மஞ்சள், வண்ணப்பூக்கள் உள்ளிட்ட பொருட்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அர்ஜுனன் தபசு நிகழ்ச்சியில் சுற்று வட்டாரக் கிராமங்களை சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.