அரியலூர் மின் மயானம் பயன்பாட்டிற்கு வந்தது
அரியலூர் மின் மயானம் பயன்பாட்டிற்கு வந்தது.
அரியலூர் நகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட பெரம்பலூர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமாக கொரோனா காலத்தில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடையில் (மின் மயானம்) இறந்தவர்களின் உடல்களை எரியூட்ட பொதுமக்கள் முன்வராததால் பயன்பாடின்றி காணப்பட்டது. இதனால் திறந்த வெளியில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு வந்ததால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மின் மயானம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்தது. இது குறித்து 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 19-ந் தேதி படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவின்பேரில், நகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, அரியலூர் மின் மயானத்தை கட்டண அடிப்படையில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. தற்போது அந்த மின் மயானத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அரியலூர் நகராட்சி மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் இறந்தவர்களின் உடல்களை திறந்தவெளியில் எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், காற்றும் மாசுபட்டு போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளது.
எனவே, பொதுமக்களின் நலன் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்திட அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைவரும் இறந்தவர்களின் உடல்களை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரம்பலூர் சாலையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கலாம். மின் மயானத்தை பராமரிப்பவர்களை 9159676421, 9626767269 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். அரியலூர் மின் மயானத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த கலெக்டருக்கும், நகராட்சி நிர்வாகத்துக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.