அரியலூர் அரசு பெண்கள் பள்ளியில் தகரங்கள் பெயர்ந்து விழும் அவலம்
அரியலூர் அரசு பெண்கள் பள்ளியில் தகரங்கள் பெயர்ந்து விழும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் நகரின் மையப்பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், பெண்கள் உயர்நிலைப்பள்ளியும் அருகருகே அமைந்துள்ளன. கடந்த ஆண்டு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் உள்ள வகுப்பு அறைகளுக்கும், 2 மாடி கொண்ட ஆய்வுக்கூடத்திற்கும் ஓடுகளை மாற்றி விட்டு இரும்பு தகரங்கள் பொருத்தப்பட்டன. தற்பொழுது ஆய்வுக்கூடத்தின் மேற்பகுதியில் உள்ள இரும்பு தகரங்கள் ஒவ்வொன்றாக பெயர்ந்து விழுந்து வருகின்றன. ஒரு தகரம் எந்த நேரத்திலும் விழுவதற்கு தயாராக நிற்கிறது. ஏராளமான பெண்கள் அந்த பகுதியில் கழிப்பிடத்திற்கு வந்து செல்லும் சூழ்நிலையில் காற்று வேகமாக அடித்தால் தகரம் பறந்து மைதானத்தில் விளையாடும் குழந்தைகள் மீதோ அல்லது கழிவறைக்கு செல்பவர்கள் மீதோ விழுந்து மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. வழக்கமாக கோடை விடுமுறையில் பள்ளிகளை பராமரிப்பு பணிகள் செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. பல இடங்களில் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் இந்த வளாகத்தின் முன் பகுதியில் இருந்தும் இந்த பள்ளியில் எந்த பராமரிப்பும் நடைபெறாமல் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.