செந்துறை தாசில்தார் சேவையில் குறைபாடு: மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

செந்துறை தாசில்தார் சேவையில் குறைபாடு காரணமாக மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-06-27 18:40 GMT

சேவையில் குறைபாடு

அரியலூர் மாவட்டம், செந்துறை சித்துடையார் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செந்துறை தாசில்தார் அலுவலகத்தை அணுகி, மணப்பத்தூர் கிராமத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலத்தின் புலப்பட நகல் கோரி ரூ.40 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தார். ஆனால் புலப்பட நகல் வழங்காததால் சிங்காரவேலு, தாம் செலுத்திய ரூ.40 மற்றும் சேவை குறைபாடாக ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. சிங்காரவேலு தாக்கல் செய்த புலப்பட நகல் கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, அவருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது என தாசில்தார் தரப்பில் வாதிடப்பட்டது.

நஷ்டஈடு வழங்க உத்தரவு

ஆனால் கோரிய புலப்பட நகலை 6 மாதங்கள் கழித்து மனுதாரருக்கு அனுப்பிய ஆவணம் மனுதாரர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டது. வழக்கின் அம்சங்களை ஆராய்ந்த, அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், தாசில்தார் உரிய கட்டணத்தை பெற்றுக்கொண்டு புலப்பட நகல் வழங்கியதில் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என தீர்ப்பு அளித்தது. ஆனால் காலதாமதமாக இருப்பினும் மனுதாரர் கோரிய புலப்பட நகல் வழங்கப்பட்டு விட்டதால் மனுதாரர் செலுத்திய ரூ.40-ஐ திருப்பி அளிக்க முடியாது என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தொகையை பெற்றுக்கொண்டு சேவையை வழங்குவதில் குறைபாடும், காலதாமதமும் ஏற்பட்டுள்ளதால் மனுதாரரான சிங்காரவேலுக்கு, செந்துறை தாசில்தார் ரூ.25 ஆயிரம் நஷ்டஈடாக, வழக்கு தாக்கல் செய்த நாளிலிருந்து வட்டியுடன் தர வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்