அரிஸ்டோ மேம்பாலம் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

அரிஸ்டோ மேம்பாலம் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

Update: 2023-05-29 22:25 GMT

அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலம்

திருச்சி மாநகரில் அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, 2 கட்டங்களாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதில் முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் சென்னை-மதுரை சாலையை இணைக்கும் வகையில் மன்னார்புரம் பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் இந்த பகுதியில் அணுகுசாலை அமைக்க முடியாமல் இருந்தது. பல்வேறு கட்ட தொடர் நடவடிக்கைக்குப்பின் ராணுவத்துறைக்கு சொந்தமான நிலம் குறித்து புரிந்துணர்வு ஏற்பட்டதை தொடர்ந்து, அணுகு சாலை அமைக்க கடந்த ஆண்டு மே மாதம் 5-ந் தேதி ராணுவ நிலம் கிடைக்கப்பெற்றது. அதன் பின்னர் ரூ.3 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் அரிஸ்டோ மேம்பாலத்தில் மன்னார்புரம் செல்லும் பகுதிக்கு அணுகு சாலை, ராணுவ நிலத்தை ஒட்டிய சுற்றுச்சுவர், சேவைச்சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முடிவடைந்தன. பின்னர் பாலத்தில் மின்விளக்கு பொருத்தும் பணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு பணிகள் போன்றவையும் முடிவடைந்தன.

பாலம் திறப்பு

இதைத்தொடர்ந்து இந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி, நேற்று காலை நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, கொடியசைத்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து போலீஸ் ரோந்து வாகனம் மற்றும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் அந்த பாலம் வழியாக சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி., மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா, மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், எம்.எல்.ஏ.க்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலம், மலைக்கோட்டை கிளையில் நேற்று அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்திர ரெட்டி முன்னிலை வகித்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் மண்டலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.291 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் காசோலைகளை அமைச்சர்கள் வழங்கி பேசினார்கள்.

முன்னதாக புதுக்கோட்டை புறநகர் கிளை அரசு பஸ்சில் பயணித்த பயணி ரூ.9 லட்சம் மதிப்புள்ள சுமார் 20 பவுன் நகை பையை தவறுதலாக விட்டுச்சென்று விட்டார். பஸ்சின் டிரைவர் கார்த்திக்கேயன், கண்டக்டர் ஜோசப் பால்ராஜ் ஆகியோர் உடனடியாக தங்களுடைய அலுவலகத்தின் மூலமாக, அந்த பையை உரிய பயணியிடம் ஒப்படைத்தனர். அவர்களின் நேர்மையான செயலை பாராட்டி, அவர்களுக்கு விழா மேடையில் அமைச்சர்கள் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

டிஜிட்டல்-நிதிக்கல்விக்கான வாகனம்

மேலும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு அடிப்படை டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வி வழங்குவதற்காக இந்தியா முழுவதும் பேபல் நிறுவனத்தின் நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் 20 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஒரு வாகனம் திருச்சி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பொது சேவை மைய டிஜிட்டல் வாகனத்தை திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் முழுவதும் சென்று 50 ஆயிரம் மக்களுக்கு டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வியை வழங்குவதை இலக்காக கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்