தூத்துக்குடியில் போலீசாரிடம் வாக்குவாதம்:ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் மீது வழக்கு
தூத்துக்குடியில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் அ.ம.மு.க. மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அ.தி.மு.க கொடியை பயன்படுத்தக் கூடாது என்று அ.தி.மு.க சார்பில் வக்கீல்கள் ஏற்கனவே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்து இருந்தனர். இதனால் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் இருந்த அ.தி.மு.க. கொடிகளை போலீசார் அகற்றியதாக கூறப்படுகிறது. அப்போது ஓ.பி.எஸ் அணி தெற்கு மாவட்ட செயலாளர் புவனேசுவரன் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தாராம்.
இது குறித்து தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் அளித்த புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் புவனேசுவரன் மீது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.