செங்கல் சூளைகளை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதம்
கணியம்பாடியில் ஏரியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள செங்கல் சூளைகளை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்கொடர்ந்து ஆக்கிரமிப்புகள அகற்றிக்கொள்ள 25 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
செங்கல் சூளைகள்
வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கணியம்பாடி புதூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. பல ஆண்டுகளாக முள் செடிகள் முளைத்து, பராமரிப்பின்றி கிடக்கும் இந்த ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக ஏரியை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த புதூர் ஏரியை ஆக்கிரமித்து சிலர் செங்கல் சூளைகள் நடத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள செங்கல் சூளைகளை அகற்ற அதன் உரிமையாளர்களுக்கு, அரசு சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து செங்கல் சூளை நடைபெற்று வருவதால் அவைகளை அகற்ற மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
வாக்கு வாதம்
அதன்படி வேலூர் சப்-கலெக்டர் கவிதா, தாசில்தார் செந்தில், மண்டல துணை தாசில்தார் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் சந்தியா, வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர்ராஜன், ஒன்றிய பொறியாளர் கவிதா, பணி மேற்பார்வையாளர் கலைவாணி, ஊராட்சி செயலாளர் உதயகுமார் மற்றும் வேலூர் தாலுகா போலீசார் பொக்லைன் எந்திரங்களுடன் செங்கல் சூளைகளை அகற்ற சென்றனர்.
அப்போது அங்கிருந்த செங்கல் சூளை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் செங்கல் சூளைகளை அகற்றுவதற்கு கால அவகாசம் வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதன்படி ஏரியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள செங்கல் சூளைகளை அகற்ற, 25 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட கால அவகாசத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.