பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு புகார்:கிராமசபை கூட்டத்தில் இருதரப்பினரிடையே வாக்குவாதம்உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு
உளுந்தூர்பேட்டை அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறி கிராமசபை கூட்டத்தில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே கீழ்குப்பம் வேலூர் கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அங்கு வந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தணிகாசலம் தலைமையிலான பொதுமக்கள் சிலர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், சுமார் 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளின் பெயரில் போலியாக பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள முயன்றனர். இதை பார்த்த ஊர் முக்கியஸ்தர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். தொடர்ந்து கூட்டம் நடந்து முடிந்தது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.