அபராதம் விதிக்கவிடாமல் அதிகாரியுடன் தகராறு

அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனத்துக்கு அபராதம் விதிக்கவிடாமல் அதிகாரியுடன் தகராறு செய்த கேரளாவை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-23 20:15 GMT

பொள்ளாச்சி

அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனத்துக்கு அபராதம் விதிக்கவிடாமல் அதிகாரியுடன் தகராறு செய்த கேரளாவை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாகன சோதனை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை ரோடு மோதிராபுரம் பிரிவில் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி மற்றும் ஊழியர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் அளவிற்கு அதிகமாக தேங்காய் ஏற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது.

பின்னர் அருகில் இருந்த எடை மேடையில் வாகனத்துடன் தேங்காயை எடை போட்டு பார்த்தபோது, அதிகமாக தேங்காய் ஏற்றி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆய்வாளர் செல்வி அந்த வாகனத்திற்கு அபராதம் விதிக்க முயன்றபோது, வாகனத்தில் இருந்த 4 பேரும் திடீரென தகராறில் ஈடுபட்டனர்.

4 பேர் கைது

இதுகுறித்து பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் அங்கு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் சென்றனர். அப்போது அவர்கள் போலீசாருடனும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஆசிக் (வயது 27), முகமது ஆசாத் (19), அன்சாகீத்(24), சுபீர் (25) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், தகாத வார்த்தையால் திட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்