உடுமலையடுத்த சின்ன வாளவாடி பகுதியைச்சேர்ந்த செந்தில்ராஜ் (வயது37) என்பவர் வாளவாடி மெயின் ரோட்டில் தேங்காய் களம் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய களத்தில் அசாம் மாநிலத்தைச்சேர்ந்த மாலிக் அஸ்தர் என்பவரது மகன் ஹம்சத் அலி (21) வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் மளிகைப் பொருட்கள் வாங்கி விட்டு களத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த ஹம்சத் அலியை வழிமறித்த 2 பேர் அவருடன் தகராறு செய்துள்ளார்கள். மேலும் குடிபோதையில் இருந்த அவர்கள் ஹம்சத் அலியை தாக்கியுள்ளனர். சம்பவம் குறித்து செந்தில்ராஜ் உடுமலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய ராகல்பாவி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன் பிரகாஷ் (19), சின்னப்பன் மகன் அரவிந்த் (26) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.