உடுமலை அருகே உரிமையாளர் விடுமுறை கொடுக்காததால் தான் வேலை செய்த நூற்பாலைக்கு தீ வைத்த வட மாநில தொழிலாளியால் ரூ.9½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது.
விடுமுறை
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உடுமலையை அடுத்த அந்தியூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 42 வட மாநில தொழிலார்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜய் (வயது 23) என்பவர் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளார். திடீரென்று அஜய் வெளியூர் போக வேண்டும் என்று 3 நாட்கள் விடுமுறை கேட்டுள்ளார். அதற்கு விடுமுறை சமயத்தில் போகலாம் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அஜய் பஞ்சு உறிஞ்சும் எந்திரத்திலுள்ள பஞ்சில் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பஞ்சுடன் சேர்ந்து எந்திரமும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. உடனே அங்கிருந்தவர்கள் உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
புகார்
ஆனால் அதற்குள் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பஞ்சு மற்றும் ரூ.6 லட்சம் மதிப்புள்ள எந்திரம் ஆகியவை தீயில் எரிந்து வீணாகின. சம்பவம் குறித்து நூற்பாலையின் உரிமையாளர் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது அஜய், 'தீ பிடித்து மில் முழுவதும் எரிந்தால் வட மாநிலத்தொழிலாளர்கள் அனைவருக்கும் விடுமுறை கிடைக்கும். அனைவரும் ஊருக்கு போகலாம்'என்று கூலாக பதில் சொல்லியுள்ளார். இதனையடுத்து போலீசார் அஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர். விடுமுறை கொடுக்காததால் நூற்பாலைக்கு தீ வைத்த செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.