கொமரலிங்கம் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் தாய்-தந்தை, தம்பியை மதுபாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மது பாட்டில் குத்து
உடுமலை அருகே உள்ள கொழுமம் குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது44). இவருடைய மகன் மாரிமுத்து (19). இவர் தன்னை தன்னைவிட வயது மூத்த வேறு சமூகத்தை சேர்ந்த
பெண்ணை காதலிப்பதாக கூறி அந்த பெண்ணை தளியில் உள்ள கந்தசாமியின் சகோதரர் ஆறுமுகம் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மாரிமுத்துவுக்கு திருமண வயது வராததால் 2 பேரையும் பிரித்து வைத்தனர்.
அதன்பின்னர் மாரிமுத்துவை கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி தேதி இரவு 8 மணிஅளவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த மாரிமுத்து மது பாட்டிலை உடைத்து தந்தை கந்தசாமி, தாயார் முத்துலட்சுமி(39) மற்றும் சகோதரர் சந்தோஷ் (16) ஆகியோரை தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த 3 பேரும் கொமரலிங்கம் அரசுமருத்துவமனையில் முதலுதவி பெற்று, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கைது
இது தொடர்பாக கொமரலிங்கம் போலீசில் கந்தசாமி புகார் செய்தார். புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.