விளையாட்டு மீது இளைஞர்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? குறைந்து வருகிறதா?
விளையாட்டு மீது இளைஞர்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? குறைந்து வருகிறதா? என்று சர்வதேச விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
ஒன்றைச் சொல்லிவிட்டு, ''விளையாட்டுக்குச் சொன்னேன். பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!'' என்று சிலர் சொல்வதை நாம் கேள்விப்பட்டு இருக்கலாம்.
இங்கே விளையாட்டு என்ற சொல் 'பொருட்படுத்தத் தேவையில்லை' என்ற பொருளில் வருகிறது. இன்றைய இளைஞர்கள் பலரும் விளையாட்டை அவ்வாறே பொருட்படுத்தத் தேவையில்லாத ஒரு செயலாகவே ஒதுக்கி விடுகிறார்கள்.
காரணம், அவர்களின் விளையாட்டு நேரங்களை நவீன தொழில்நுட்பங்கள் பறித்துக்கொள்கின்றன என்றே சொல்ல வேண்டும்.
சாதிக்க முடியும்
கம்ப்யூட்டர், செல்போன் என்று எந்திரங்களில் மூழ்கி கிடக்கும் அவர்கள், உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் சோர்வடைந்து வருகிறார்கள்.
சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். இளைஞர்கள் அதை உணர வேண்டும். மாணவர்கள் விளையாட்டை வெறும் விளையாட்டாக கருதிவிடக் கூடாது. உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் சேர்ப்பது விளையாட்டு. எனவே விளையாட்டை ஒரு பாடமாக நினைத்து படித்துக்கொள்ள வேண்டும்; பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் எந்த அளவில் விளையாட்டுகளில் ஆர்வம் காண்பிக்கின்றனர் என்பது குறித்து சர்வதேச விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதுபற்றிய விவரங்களைக் காண்போம்.
கைப்பந்து வீரர் பி.ஜெகதீசன்
இதுகுறித்து சர்வதேச கைப்பந்து வீரரும், நெல்லை நண்பர்கள் கைப்பந்து கழகம் மற்றும் டாக்டர் சிவந்தி கைப்பந்து கழகம் செயலாளருமான பி.ஜெகதீசன் கூறும் போது, 'சென்னையில் கடந்த 1986-ம் ஆண்டு டாக்டர் சிவந்தி ஆதித்தன் பெயரில், அவரின் தொடர் உதவியுடன் ''டாக்டர் சிவந்தி கிளப்'' என்ற பெண்களுக்கான கைப்பந்து அணி தொடங்கப்பட்டு அதன் மூலம் பல பெண்கள் இலவச கைப்பந்து பயிற்சி பெற்று பல மாநில, தேசிய, மற்றும் சர்வதேச அளவில் பல போட்டிகளில் கலந்துகொண்டு உள்ளனர். இவர்கள் பல அரசு துறைகளில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். 2013-ம் ஆண்டு பள்ளி அளவில் உள்ள வசதியற்ற பெண் பிள்ளைகளுக்கு பயிற்சி அளித்து புதிய பல வீராங்கனைகளை உருவாக்கி வருகிறோம். இந்த விளையாட்டு அரங்கில் கைப்பந்து, கபடி மட்டுமின்றி, ஹாக்கி, கூடைப்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டிற்கு பயிற்சி பெற்று வந்தனர். 2000-ம் ஆண்டிற்கு பிறகு மாணவர்களின் செல்போன் மோகம், பள்ளிகளின் தேர்ச்சி விகித எதிர்பார்ப்பாக பெரும்பாலான பள்ளிகளின் விளையாட்டு வகுப்புகளுக்கு அனுமதியின்மை. பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாமை, பெற்றோர்களிடம் விளையாட்டின் மீதான ஆர்வமின்மை போன்ற பல காரணங்களால் இருக்கின்ற விளையாட்டு அரங்கங்களும் பயிற்சி பெற மாணவர்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன.
கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு போட்டிகள் நடத்துவதற்கு பல நிறுவனங்கள் உதவி செய்வதை நிறுத்தி விட்டன. இதனால் போட்டிகள் நடத்த முடிவதில்லை. நாம் சர்வதேச அளவில் ஜொலிக்க முடியாமல் போகிறது' என்றார்.
ஷைனி வில்சன்
கடந்த 1981-ம் ஆண்டில் இருந்து 1996-ம் ஆண்டு வரை 4 ஒலிம்பிக் போட்டிகள் உள்பட 75 சர்வதேச தடகள போட்டிகளில் கலந்து கொண்டு 80-க்கும் அதிகமான விருதுகளை பெற்ற ஒரே பெண் என்ற பெருமையை கொண்டவரும், சென்னையில் உள்ள இந்திய உணவு கழகத்தின் தென்மண்டல பொதுமேலாளருமான ஷைனி வில்சன் கூறும் போது, 'மத்திய, மாநில அரசுகள் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்த பள்ளி, மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஊக்குவித்து வருகிறது. விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வம் காண்பித்தாலும் அது போதுமானதாக இல்லை. இன்னும் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காண்பிக்க வேண்டும். ஒலிம்பிக் சங்க தலைவராக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பொறுப்பேற்ற பிறகு அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் போட்டிகளில் பங்கேற்றதுடன், சர்வதேச அளவிலும் விருதுகளையும் குவித்தனர். தற்போது விளையாட்டு வீரர்களுக்கு அரசு செய்து தரும் வசதிகளை பயன்படுத்தி அதிகம் பேர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சர்வதேச அளவில் சாதனைகள் படைக்க முன்வர வேண்டும். சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள நான் செல்லும்போது இப்போது இருப்பது போன்ற வசதிகள் எதுவும் பெரிதாக கிடையாது. ஆனால் தற்போது அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கு அதிக வசதிகள் செய்து தருவதால் அதனை பயன்படுத்தி சர்வதேச அளவில் இந்தியாவிற்கு விளையாட்டு துறையில் மேலும் நல்ல பெயரை பெற்றுத்தர இன்னும் அதிகமான இளைஞர்கள் முன் வர வேண்டும்' என்றார்.
நீச்சல் பயிற்சியாளர் பாண்டியன்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் பாண்டியன் கூறும் போது, 'உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து போட்டிகளை முன்பு இங்கு எவரும் பார்ப்பதில்லை. ஆனால் தற்போது இங்கும் கால்பந்து போட்டிக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். படித்தால் கூட அதிகம் பேருக்கு வேலை கிடைப்பதில்லை. ஆனால் விளையாட்டில் ஜொலிக்கும் அனைவருக்கும் வேலை கிடைக்கிறது. இதனால் இளைஞர்கள் அதிகம் பேர் தற்போது விளையாட்டை நோக்கி படையெடுக்கிறார்கள். செல்போன்களை இளைஞர்கள் அதிகம் பேர் பார்ப்பதாக கூறுகின்றனர். ஆனால் அது தவறு, ஒரு குறிப்பிட அளவுதான் செல்போனை பார்க்க முடியம். அதற்கு பிறகு களைப்படைந்து விடுகின்றனர். ஆனால் விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வமாக கலந்து கொள்ள முடிகிறது. கிராமங்களிலும் அதிகத்திறமை கொண்ட விளையாட்டு வீரர்கள் உருவாகின்றனர். ஊக்கத்தொகைகளும் வழங்கப்பட்டு ஊக்கப்படுத்துவதால் இளைஞர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர்' என்றார்.
கபடி பயிற்சியாளர் என்.ஜெயராஜ்
இந்திய விளையாட்டு ஆணையத்தின் சீனியர் கபடி பயிற்சியாளர் (ஓய்வு) என்.ஜெயராஜ் கூறும் போது, 'கிரிக்கெட் விளையாட்டில்தான் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகம் உள்ளது. தற்போது இளைஞர்களுக்கு படிப்படியாக அனைத்து விளையாட்டுகளிலும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதற்கு ஊடகங்களின் பங்கும் அதிகம் உள்ளது. அதேபோல் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுத்தரப்படுகிறது. அதேபோல் கபடி விளையாட்டுகளிலும் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதில் இளைஞர்கள் அதிகம் பேர் வந்து கலந்து கொள்கின்றனர். பள்ளிகளில் விளையாட்டு மைதானம் அதிகம் இருப்பதால் இளைஞர்கள் பள்ளிகளில் அதிகளவில் விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். மாறாக வீடுகள் அருகில் பொது இடங்களில் விளையாட்டு மைதானம் இல்லாததால் மாலை நேரங்களில் இளைஞர்கள் பெரிய அளவில் விளையாட்டுகளில் கலந்து கொள்வதில்லை. எனவே, பொது இடங்களிலும் விளையாட்டு மைதானங்களை அமைக்க வேண்டும்' என்றார்.
விளையாட்டு மைதானம் இல்லை
விழுப்புரம் அருகே தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சூர்யகலா:-
இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் குறைவதற்கு போதிய விளையாட்டு மைதானம் இருப்பதில்லை. விளையாட்டில் ஆர்வம் குறைவதற்கு அவர்களுக்கு பாடவேளை பள்ளியில் ஒதுக்குவதில்லை. உடற்கல்வி பாடவேளையை மற்ற பாட ஆசிரியர்கள் எடுத்துக்கொள்கின்றனர். உடற்கல்விக்கு தேவையான உபகரணங்கள் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. மாணவர்களுக்கு விளையாடுவதற்கான போதிய விழிப்புணர்வு கிடைப்பதில்லை. உடல் ஆரோக்கியமின்மை, உடற்பயிற்சி பற்றியும் போதிய விழிப்புணர்வு இல்லை. விளையாட்டில் ஏற்படும் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்க ஆலோசகரும் இல்லை. மாணவர்கள், இளைஞர்கள் செல்போன்களிலேயே மூழ்கி கிடப்பதால் விளையாட்டில் அவர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. அதுபோல் போதைக்கு அடிமையாவதாலும் விளையாட்டில் அவர்களால் ஆர்வம் செலுத்த முடியாமல் போகிறது. ஆகவே படிப்புடன் உடற்கல்வி என்பதும் மிகவும் அவசியம். இதை இன்றைய மாணவ சமுதாயத்தினர், இளைஞர்கள் உணர்ந்து விளையாட்டிலும் அதிக ஆர்வம் செலுத்தினால் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம், விளையாட்டுத்துறைகளிலும் பல்வேறு சாதனைகளை புரியலாம்.
ஆர்வம் குறைந்து வருகிறது
மேல்மலையனூர் அருகே செவலபுரையை சேர்ந்த சவுந்தர்:-
இன்றைய இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வம் குறைந்து வருவதாகவே நான் கருதுகிறேன். காரணம், செல்போன்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. இதனால் வெளியில் சென்று விளையாடாமல் செல்போனிலேயே கேம் விளையாடுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் சிறுவர், சிறுமிகள்கூட வெளியில் சென்று விளையாடவே தயங்குகின்றனர். ஏனெனில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் விளையாடினால் பாடத்தை படிக்க முடியாமல் போய்விடுமோ? என்ற பெற்றோர்களின் தவிப்பு. இவற்றால் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தற்போது விளையாட்டில் ஆர்வம் குறைந்து வருகிறது.
அதிக முக்கியத்துவம்
செஞ்சியை சேர்ந்த கோபி:-
தற்போது விளையாட்டு என்பது ஒரு முக்கியத்துவமான துறையாக இருக்கிறது. முன்பெல்லாம் விளையாட்டுக்கு எந்தவொரு முக்கியத்துவமும் தர மாட்டார்கள். ஆனால் தற்போது விளையாட்டுத்துறைக்கு என்று ஒரு தனி அமைச்சர் நியமிக்கப்பட்டு பள்ளி- கல்லூரிகளில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் சமீபத்தில் முதல்-அமைச்சர் கோப்பை என்ற பெயரில் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. முன்பைவிட இப்போது விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதால் இன்றைய மாணவ சமுதாயத்தினர், இளைஞர் சமுதாயத்தினர் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வ முடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
விளையாட்டு பொழுதுபோக்கானது
திண்டிவனத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் அரவிந்த்:-
இளைஞர்கள் மத்தியில், விளையாட்டில் ஆர்வம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தற்போது செல்போனில் விளையாடுவதால் வருங்கால இளைஞர்களிடம் விளையாட்டில் உள்ள ஆர்வம் சற்று குறைய வாய்ப்பு ஏற்படலாம். இதை போக்கும் வகையில் தமிழக அரசு, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இளைஞர்களுக்கு விளையாட்டு என்பது பொழுதுபோக்கானது. அதை யாரும் தவற விடுவதில்லை. விளையாட்டு என்பது இளைஞர்களுக்கு எப்போதும் தேவையான ஒன்றுதான். இதன் மூலம், உடல் பலம் பெறுவதால் இளைஞர்கள் எப்போதும் விளையாட்டை கைவிடுவதில்லை.
பெருமையை தேடி தரவேண்டும்
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு உடற்கல்வி ஆசிரியை ஷம்ஷாத்பேகம் கூறும்போது:-
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் குறையவில்லை. விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீடு கிடைப்பதுடன், அரசு பணியில் சேர முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைப்பதால் மாணவர்கள் விளையாட்டில் ஆர்வமாக உள்ளனர். பொருளாதார ரீதியாக கிராமப்புற மாணவர்கள் பின் தங்கி இருப்பதால் விளையாட்டில் ஆர்வம் குறைந்துள்ளது. கொரோனா காலங்களில் வீட்டிலேயே முடங்கி கிடந்த இளைஞர்கள் பெரும்பாலானோர் கால்பந்து, கைபந்து, கூடைபந்து விளையாடாமல், செல்போனில் கேம் விளையாடி, அதற்கு அடிமையாகிவிட்டனர். இதனால் கிராமப்புறங்களில் விளையாட்டு ஆர்வம் சற்று குறைந்து வருகிறது. இருப்பினும் கிராமப்புற இளைஞர்கள் அனைவரும் விளையாட்டுகளில் தங்களது திறமைகளை வளர்த்து நமது ஊருக்கும், நாட்டுக்கும் பெருமை தேடி தரவேண்டும் என்றார்.
இந்திய தேசிய விளையாட்டு நாள்
இதுகுறித்து விளையாட்டு துறை அதிகாரிகள் கூறும் போது, 'உலகெங்கிலும் ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் முரசை மேஜர் தியான்சந்த் என்பவரின் ஹாக்கிதான் ஓங்கி ஒலிக்கச் செய்தது. இவர் தனது வாழ்க்கை முழுவதையும் விளையாட்டுக்கே அர்ப்பணம் செய்தார். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக இருந்த மேஜர் தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந்தேதியை 'இந்திய தேசிய விளையாட்டு நாள்' என்று கடந்த 2012-ம் ஆண்டு முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கமாகும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு நாளில் ஜனாதிபதியால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்படுகின்றன. விளையாட்டில் இளைஞர்கள் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன' என்றார்.