'நீங்கள் நலமா?' திட்டம்: மக்களை தொடர்பு கொண்டு பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

“நீங்கள் நலமா” திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6-ம் தேதி தொடங்கி வைத்தார்.

Update: 2024-03-16 08:22 GMT

சென்னை,

"நீங்கள் நலமா" திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6-ம் தேதி தொடங்கி வைத்தார். பயனாளிகளிடம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மக்கள் நலத்திட்டங்கள் குறித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் பயனாளிகளை தொடர்பு கொண்டு துறைவாரியாக நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறிந்தார்கள்.

அதன் தொடர்ச்சியாக, இன்று முதல்-அமைச்சர் அவர்கள் முகாம் அலுவலகத்திலிருந்து பல்வேறு பயனாளிகளை நேரடியாக காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த அவர்களது பின்னூட்டங்களை கேட்டறிந்தார்.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மதுரை, தெப்பக்குளத்தை சேர்ந்த சி. விஜய் ஆனந்த் என்பவரிடம் முதல்-அமைச்சர் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு பேசி, அவர் இத்திட்டத்தின் மூலம் பெற்ற நன்மைகள் குறித்து கேட்டார்.

அப்போது, விஜய் ஆனந்த் அவர்கள் அரசின் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தைப் பற்றி அறிந்து, அதன் மூலமாக மருத்துவமனைக்கான உபகரணங்கள் வாங்கிட தொழில் கடன் பெற்றதாக தெரிவித்தார்.

மேலும், தொழில் கடன் வேண்டி இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவுடன் உடனடியாக அது பரிசீலிக்கப்பட்டு, வங்கியில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்த தகவல்களை தெரிவித்து. அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து. எவ்வித தடங்கலுமின்றி விரைவாக 5 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று, அதன்மூலம் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது நல்ல பயன்பாட்டில் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், சுய தொழில் தொடங்கியது குறித்து நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்று முதல்-அமைச்சர் கேட்ட போது, இதுவரை தான் ஒருவருக்கு கீழ் பணியாற்றி வந்ததாகவும், தற்போது தொழில்முனைவோராகி 30 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருவது மகிழ்ச்சியும், பெருமையும் அளிப்பதாக உள்ளது என விஜய் ஆனந்த் கூறினார்.

அதேபோல, மகளிர் சுய உதவிக்குழுவின் கீழ் பயன்பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த வி. பானுப்பிரியாவை தமிழ்நாடு முதல்-அமைச்சர் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பானுப்பிரியா தான் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகளிர் குழுவில் உறுப்பினராக உள்ளதாகவும், மொத்தம் 20 பேர் அதில் உறுப்பினர்களாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

வங்கியிலிருந்து தங்களுக்கு எவ்வளவு கடன் கிடைத்தது. அதை வைத்து என்ன தொழில் செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று முதல்-அமைச்சர் கேட்டபோது, பானுப்பிரியா, வங்கியிலிருந்து கிடைத்த கடன் தொகையை கொண்டு தனது அரிசி கடையை விரிவாக்கம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதல்-அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தார். அதேபோல், மேலும் பல பயனாளிகளிடம் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்