மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா?: கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு

தூத்துக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்று கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு நடத்தினார்.

Update: 2023-02-07 18:45 GMT

தூத்துக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்று கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

கல்வி அலுவலகத்தில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று காலை திடீரென வந்தார். அவர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் வருகைப்பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அலுவலர்கள் புகார்களுக்கு இடம் தராமல் பணியாற்ற அறிவுறுத்தினார். தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு மையம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமாக வழங்கப்படுகிறதா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளி மாணவர்களுடன், அவர்களின் படிப்பு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உடன் இருந்தார்.

புதுமைப்பெண் இன்று தொடக்கம்

இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) 2-வது கட்டமாக காணொலி காட்சி மூலம் புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 572 பேர் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற உள்ளனர். இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ள தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், மாவட்ட சமூகநல அலுவலர் ரதிதேவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்