சிதம்பரத்தில் மதுபோதையில் பஸ்களை டிரைவர்கள் இயக்குகிறார்களா? போக்குவரத்து போலீசார் சோதனை
சிதம்பரத்தில் மதுபோதையில் பஸ்களை டிரைவர்கள் இயக்குகிறார்களா? என போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தினா்.
சிதம்பரம்,
சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிதம்பரத்தில் தனியார் மற்றும் அரசு பஸ்களை டிரைவர்கள் அதிவேகமாகவும், குடிபோதையிலும் இயக்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் சிதம்பரம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்செல்வன் தலைமையிலான போலீசார் சிதம்பரம் பஸ் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் மதுபோதையில் பஸ்களை இயக்குகிறார்களா? என மது சோதனை கருவி மூலம் சோதனை செய்தனர். அதில் டிரைவர்கள் யாரும் மதுபோதையில் பஸ்களை இயக்கவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் மதுபோதையில் பஸ்களை இயக்கினால், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று டிரைவர்களை போலீசார் எச்சரித்தனர்.