ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுமா?

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-10 20:42 GMT

மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம்

உப்பிலியபுரத்தில் கடந்த 1967-ம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. உப்பிலியபுரம் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த மக்கள் மருத்துவ சிகிச்சை பெற வசதியாக அமைக்கப்பட்ட இந்த சுகாதார நிலையம், கடந்த 1995-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலைய வளாகத்தில் மருத்துவ சிகிச்சைக்காக 7 கட்டிடங்களும், டாக்டர்களுக்கான குடியிருப்புகளும் உள்ளன.

இந்த சுகாதார நிலையத்தில் ஆய்வகம், ஸ்கேன், இ.சி.ஜி. வசதிகள், மகப்பேறு பிரிவு, சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு போன்றவை உள்ளது. மேலும் மன நல மருத்துவ ஆலோசனையும் வழங்கப்படுகிறது. இந்த சுகாதார நிலைய கட்டுப்பாட்டில் டாப்செங்காட்டுப்பட்டி, பி.மேட்டூர், எரகுடி ஆகிய ஊர்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன.

73 கிராம மக்களுக்கு சிகிச்சை

மேலும் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள 2 கட்டிடங்களில் உள்நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக 30 படுக்கைகள் உள்ளன. இங்கு தினமும் சுமார் 500 வெளிநோயாளிகளுக்கும், சுமார் 10 உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 10 டாக்டர்கள், ெசவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், ஆய்வாளர்கள் உள்பட மொத்தம் 80 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த சுகாதார நிலையத்தில் உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள பாலகிருஷ்ணம்பட்டி, உப்பிலியபுரம் என 2 பேரூராட்சிகள் மற்றும் ஆலத்துடையான்பட்டி, ஆங்கியம், அழகாபுரி, இ.பாதர்பேட்டை, எரகுடி, காமாட்சிபுரம், கொப்பம்பட்டி, கோட்டப்பாளையம், மாராடி, நாகநல்லூர், ஒக்கரை, பச்சபெருமாள்பட்டி, சிறுநாவலூர், சோபனபுரம், தளுகை, தென்புறநாடு, வைரிசெட்டிப்பாளையம், வெங்கடாசலபுரம் ஆகிய 18 ஊராட்சிகளில் உள்ள 73 கிராமங்களை சேர்ந்த மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவது குறிப்பிடத்தக்கது.

சீரமைக்கப்படாத சுற்றுச்சுவர்

ஆனால் இந்த சுகாதார நிலையத்தில் மழை காலத்தில் மழைநீர் தேங்குவதால் நோயாளிகள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குரங்குகள் தொல்லையும் அதிகமாக உள்ளது. மேலும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இடிந்து விழுந்த பின்புற சுற்றுச்சுவரை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியும், இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் சுவர் இடிந்துள்ள பகுதி தற்போது நடைபாதையாக பயன்படுத்தப்படும் நிலை உள்ளது.

சுகாதார நிலைய வளாக பகுதியில் உயர்மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. கழிவறைகளும் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை என்று நோயாளிகள் கூறுகின்றனர். எனவே இந்த சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்