நீண்டதூர ரெயில்களில் போதுமான வசதி செய்து தரப்படுகிறதா?
நீண்ட தூர ரெயில்களில் போதிய வசதிகள் இருக்கிறதா? என்று பயணிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 82 ரெயில்கள் நின்று செல்கின்றன. இதில் 60 ரெயில்கள் தினசரி ரெயில்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, மும்பை, பெங்களூரு, மைசூரு, திருவனந்தபுரம் உள்பட முக்கிய நகரங்களுக்கு திண்டுக்கல் வழியாக ரெயில்கள் செல்கின்றன. இதில் சென்னை, மும்பை, பெங்களுரூ, மைசூரு ஆகிய நகரங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் திண்டுக்கல்லில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் பயணிக்கின்றனர்.
சென்னையில் இருந்து திண்டுக்கல், பழனி வழியாக பாலக்காட்டுக்கு இயக்கப்படும் ரெயிலில் பல்வேறு ஊர்களில் இருந்து ஆன்மிக பயணமாக வருகின்றனர். மேலும் பழனி, கொடைக்கானலுக்கு வடமாநிலங்களில் இருந்து பயணிகள் வருகின்றனர். அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த வகையில் தினமும் 7 ஆயிரம் பேர் திண்டுக்கல்லில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு ரெயிலிலில் செல்கின்றனர். அதில் சுமார் 2 ஆயிரம் பேர் நீண்ட தூர ரெயில்களில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது. இந்த நீண்ட தூர ரெயில்களில் போதிய வசதிகள் இருக்கிறதா? என்று பயணிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
தண்ணீர் பிரச்சினை
திண்டுக்கல்லை சேர்ந்த சிப்லி:- நான் மும்பையில் இருந்து ரெயிலில் வருகிறேன். ரெயிலில் குளிர்சாதன பெட்டிகளில் தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட குறைபாடு இல்லை. ஆனால் இதர முன்பதிவு பெட்டியில் குடிநீர் உள்ளிட்ட சில பிரச்சினைகள் இருக்கின்றன. மேலும் நீண்டதூரம் செல்லும் போது முதியவர்களுக்கு கீழ் படுக்கைகளை வழங்கினால் நன்றாக இருக்கும். ஒரு சில முதியவர்கள் ரெயிலில் ஏறிய பின்னர் பிற பயணிகளிடம் கீழ் படுக்கையை கேட்டு கெஞ்சும் நிலை உள்ளது. அனைத்து ரெயில்களிலும் அடுத்து வரும் ரெயில் நிலையத்தை அறியும் வசதியை ஏற்படுத்தினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தூங்க முடியவில்லை
மணக்காட்டூரை சேர்ந்த இல்லத்தரசி ஜெயந்தி:-ஒருசில ரெயில்களில் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. கழிவறை, கை கழுவும் இடத்தில் இருக்கும் குழாய்களில் தண்ணீர் ஒழுகி வீணாகும் காட்சிகளை அடிக்கடி பார்க்க முடிகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பயணிகள் சிரமப்படுகின்றனர். ஒருசில ரெயில்களை தவிர பெரும்பாலான பெட்டிகளில் பூச்சி தொல்லை இருக்கிறது. அதேபோல் முதியவர்கள், பெண்களுக்கு பயண சலுகைகள், கீழ் படுக்கைகளை வழங்கினால் மிகவும் நன்றாக இருக்கும். நள்ளிரவில் கூட விளக்குகளை எரிய வைத்து கொண்டு சிலர் பேசிக் கொண்டிருப்பதால், பிற பயணிகளால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இதுபோன்ற குறைபாடுகளை நீக்கினால் ரெயில் பயணம் நன்றாக இருக்கும்.
பெட்டிகளில் தூய்மை
பழனியை சேர்ந்த இல்லத்தரசி பூங்கொடி:- குடும்பத்துடன் வெகுதூரத்தில் இருக்கும் ஊர்களுக்கு செல்வதற்கு ரெயில் பயணம் தான் வசதியாக இருக்கிறது. ரெயிலில் செல்வதற்கு முக்கிய காரணமே கழிப்பறை வசதி தான். ஆனால் கழிப்பறைக்கு தண்ணீர் வருவது திடீரென நின்று விடுவதால், ரெயில் பயணிகள் தவிக்கும் சூழல் உள்ளது. எனவே கழிப்பறையில் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். மேலும் ரெயில் பெட்டிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். ரெயில் பயணத்துக்கான சலுகைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டன. அந்த சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ரெயில்களில் குறைந்தபட்சம் 2 பெட்டிகளுக்கு ஒரு போலீஸ்காரரை பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டும்.
முதியோருக்கு கீழ் படுக்கை
பழனிக்கு ரெயிலில் வந்த சென்னையை சேர்ந்த செல்வராஜ்:- தொலைதூர ஊர்களுக்கு செல்வதற்கு ரெயில் பயணமே வசதியாக இருக்கிறது. இதற்காக முன்பதிவு செய்யும்போது முதியவர்கள் கீழ் படுக்கை கேட்டால் பெரும்பாலான நேரங்களில் கிடைப்பதில்லை. மேல்படுக்கை கிடைப்பதால், முதியவர்கள் ஏறி தூங்க முடியாமல் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே முதியோருக்கு மேல்படுக்கை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் கழிப்பறைகள் விரைவில் சுகாதாரமற்ற நிலையில் மாறிவிடுகிறது. தொற்று மூலம் பல்வேறு நோய்கள் பரவி வருவதால், கழிப்பறைகளை சுகாதாரமாக வைப்பதை ரெயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். ஒருசில ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நிற்கும்போது கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. அதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி முன்னாள் ராணுவ வீரர்
தேனியை சேர்ந்த முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் வெங்கடபூபதி:- எங்களைப் போன்று சக்கர நாற்காலியை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரெயில் பயணம் என்பது மிகுந்த சிரமம் கொடுப்பதாகவே இருக்கிறது. 21 வகையான மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள். ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் வந்துசெல்வதற்கு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாகவே இருக்கின்றன. சக்கர நாற்காலியில் செல்லும் போது டிக்கெட் எடுப்பதில் இருந்தே சிரமம் தொடங்குகிறது. டிக்கெட் வழங்கும் இடம் உயரமாக இருப்பதால் பிறர் உதவியை நாடும் நிலைமை உள்ளது. மேலும் டிக்கெட் எடுக்கும் இடத்திற்கு சக்கர நாற்காலியில் செல்ல போதிய இடவசதி இல்லாத சூழலும் உள்ளது. நீண்டதூரம் பயணம் செய்யும் போது ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளை எங்கு நிற்கும் என்று கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது. பெட்டியை கண்டுபிடித்து சென்றாலும் அதற்குள் ஏறுவதற்கு சிரமமாக உள்ளது.
ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்வதற்கும் மிகுந்த சிரமம் உள்ளது. வடமாநிலங்களுக்கு செல்லும் போது மாற்றுத்திறனாளிகள் பெட்டியிலும் சிலர் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். கழிப்பிடம் செல்வதற்கு கூட சிரமங்களை சந்திக்க வேண்டியது உள்ளது. தனியார் கேட்டரிங் வசதிகள் வந்து விட்டதால் விரும்பிய உணவை வாங்கி சாப்பிட முடிகிறது. ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவையான வசதிகளை ரெயில்வே நிர்வாகம் முழுமையாக செய்து கொடுக்க வேண்டும்.
தரமான உணவு
கம்பம் தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் செந்தில்:- ரெயிலில் செல்லும் போது குடிநீர் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. காசு கொடுத்து தான் குடிநீர் வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் பயணிகள் இருக்கிறார்கள். ஏழை, எளிய பயணிகள் நீண்டதூரம் பயணம் செய்யும் போது குடிநீருக்கு அதிக செலவு செய்ய வேண்டியது உள்ளது. கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. தரமான உணவுகள் கிடைப்பதில்லை. முன்பதிவு செய்த பெட்டிகளில் முன்பதிவு இல்லாத நபர்களும் ஆக்கிரமிக்கின்றனர். சில நேரம் முன்பதிவு செய்து செல்லும் போது, சிலர் தங்களின் குடும்ப சண்டையை எல்லாம் ரெயிலுக்குள் நடத்துவார்கள். அது நிம்மதியாக தூங்க முடியாமல் போய்விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.