கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மாணவிகளுக்கு தொல்லியல் குறித்த உள்விளக்க பயிற்சி
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மாணவிகளுக்கு தொல்லியல் குறித்த உள்விளக்க பயிற்சி நடந்தது.
உள்விளக்க பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு தொல்லியல் குறித்த உள்விளக்க பயிற்சி நடந்து வருகிறது. நேற்று அருங்காட்சியகத்தில் உள்ள விஜயநகர காலத்தை சேர்ந்த கல்வெட்டு ஒன்றினை படியெடுத்து, படித்து பொருள் கொள்வது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம், இடை வரலாற்று காலம் மற்றும் வரலாற்று காலங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தமிழி என்று அழைக்கப்படும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் மாணவிகளுக்கு கற்று தரப்பட்டது. பின்னர் அந்த எழுத்தில் இருந்து இன்றைய கால தமிழ் வரை எழுத்துக்களின் வளர்ச்சியை எடுத்துக்காட்டு களுடன் விளக்கப்பட்டது.
கட்டிடக்கலை சிற்பம்
இந்த பயிற்சியில் பர்கூர், காரிமங்கலம், தர்மபுரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இனி வரும் நாட்களில் கிரந்த எழுத்துக்கள், தமிழ் எண்கள் கல்வெட்டுகளில் உள்ள ஆண்டுகளை கணக்கிடும் முறை, கோவில் கட்டிடக்கலை சிற்பம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் அளித்து வருகிறார். இதற்கான ஏற்பாட்டை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார் மற்றும் பெருமாள் ஆகியோர் செய்துள்ளனர்.