அறந்தாங்கி ரெயில் நிலையத்தின் அவல நிலை

அறந்தாங்கி ரெயில் நிலையத்தில் நடைமேடை சேதமடைந்தும், குடிநீர் குழாயில் தண்ணீர் வராமலும், நுழைவு வாயிலில் பெயர் எழுத்து அழிந்தும் அவல நிலையாக காணப்படுகிறது.

Update: 2023-02-18 18:57 GMT

ரெயில் நிலையம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது நகராட்சியாக அறந்தாங்கி அமைந்துள்ளது. இங்குள்ள ரெயில் நிலையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டவையாகும். இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் முகப்பில் அறந்தாங்கி என தமிழ், ஆங்கிலம், இந்தி எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பது அழிந்து காணப்படுகிறது.

ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியே அலங்கோலமாக காணப்படுவது வேதனைக்குரியதாக உள்ளது. ரெயில் நிலையத்தில் 2 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் வசதிக்காக குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குழாயில் தண்ணீர் தான் வரவில்லை. மேலும் சில குழாய்களில் தண்ணீர் திறக்க கூடிய நல்லி கூட இல்லாமல் உள்ளது.

நடைமேடையில் விரிசல்

இதேபோல ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. மேலும் மரங்கள் வைக்கப்பட்டுள்ளதில் அதனை சுற்றியுள்ள தடுப்பு சுவர்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. ரெயில் நிலையத்தில் நுழைவுவாயில் அருகே தற்போது புதிதாக வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

அதிகாரிகள் வர்ணம் பூச அறிவுறுத்தியதால் பணிகள் நடைபெறுவதாக அங்கிருந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர். ரெயில் நிலையத்தில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட திருச்சி கோட்ட ரெயில்வே உயர் அதிகாரிகள், இதனையும் பார்வையிட்டுள்ளனர். மேலும் சேதமடைந்துள்ளதை சீரமைக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் அறந்தாங்கி ரெயில் நிலையத்தின் அவல நிலையை போக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்