நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாகுபாடின்றி முழுமையாக அகற்ற அதிகாரிகளுக்கு, கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-06-28 12:24 GMT

கலசபாக்கம்

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாகுபாடின்றி முழுமையாக அகற்ற அதிகாரிகளுக்கு, கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-

பசுமை வீடுகள்

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான பஞ்சாயத்துகளில் கடந்த 2016-2017-ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பசுமை வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு முதல்கட்ட தொகை ரூ.26 ஆயிரம் வழங்கியும் இதுவரைக்கும் பணி நடைபெறாமல் நிலுவையில் உள்ளன.

இப்பணிகளை வருகிற 10-ந்தேதிக்குள் தொடங்கி 2 மாதத்திற்குள் முடிக்க அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பயனாளிகளுக்கு இடம் சம்பந்தமான பிரச்சினைகள் எதுவும் இருப்பின் இதற்கு தாசில்தார் உடனடியாக அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பயனாளிகள் இறந்து இருப்பின் அவருக்கு பதிலாக மாற்று பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து இப்பணியை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தவறும் பட்சத்தில் பயனாளிகள் தாங்கள் பெற்றுள்ள ரூ.26 ஆயிரத்தை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்.

முழுமையாக...

அரசு பணத்தை பெற்றுக்கொண்டு திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்தால் அவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

எனவே பயனாளிகள் உடனடியாக அரசு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த கூட்டத்தில் பெரும்பாலான ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொள்ளாதது வருத்தமாக உள்ளது. என்னை சந்திக்க திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர்.

ஆனால் நான் நேரடியாக இங்கே வந்து இருந்தும், தலைவர்கள் வராதது வேதனையாக உள்ளது.

கலசபாக்கம் ஒன்றியத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் பார்க்காமல் அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக உள்ளது. மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை யாருடைய தலையீடும் இல்லாமல் முழுமையாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னையில் நடைபெற்ற கலெக்டர்கள் ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அதனால் அதிகாரிகள் இந்த விஷயத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலு, கோவிந்தராஜூலு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்