மறைமலைநகரில் உள்ள போர்டு ஆலை தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும்
மறைமலைநகரில் உள்ள போர்டு ஆலை தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையை அடுத்த மறைமலை நகர் போர்டு கார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கான மாற்று வேலை, இழப்பீடு ஆகியவை குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், அந்த ஆலை இம்மாத இறுதியில் மூடப்படுவதாக வெளியாகி வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த விவகாரத்தில் தொழிலாளர் நலன் பாதிக்கப்படுவதை அரசு அனுமதிக்கக்கூடாது.
போர்டு ஆலையில் பணியாற்றுவோரில் பெரும்பான்மையினர் 40 வயதைக் கடந்தவர்கள். அவர்களால், இனி வேறு நிறுவனங்களில் வேலை தேட முடியாது. அதைக் கருத்தில் கொண்டுதான் அவர்களுக்கான இழப்பீடு தீர்மானிக்கப்பட வேண்டும். இதில் தமிழக அரசுக்கும் பங்கு உண்டு. அந்தக் கடமையை தமிழக அரசு திறம்பட செய்து, போர்டு ஆலை தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும். அதுமட்டுமின்றி, மறைமலை நகரில் உள்ள போர்டு ஆலையை வேறு கார் நிறுவனங்களை ஏற்று நடத்தச் செய்வதன் மூலம் அவர்களின் வேலை மற்றும் எதிர்காலத்தையும் தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.