தொழிற்பயிற்சி நிலைய சான்று பெற்றவர்கள்10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம்
தொழிற்பயிற்சி நிலைய சான்று பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற வருகிற 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சான்றிதழ்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்.டி.சி, என்.ஏ.சி சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்.டி.சி, என்.ஏ.சி. சான்றிதழ் பெற்றவர்கள், 11, 12-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கலாம்
இதைத் தொடர்ந்து அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022- ல் நடத்த பெற்ற மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப்படிவம், முழுவிவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அதனை பின்பற்றி விண்ணப்பதாரர் தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ 28.2.2023-ந் தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.